வெள்ளி, 27 மார்ச், 2009

அரசியல்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களே!
---------------------------------------------------------------------------

தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்து அதை அறிவித்தும் விட்டீர்கள்.    ஆகவே எனக்குத்தெரிந்த நியாயம் என்ற வகையில் சில விபரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
 இந்தியாவின் பிரதமராகி நாட்டை தலைகீழாக மாற்றி சாதனை மனிதராக ஆகவேண்டும் என்பது நிச்சயமாக தங்களின் கனவாக இருக்காது என்று நம்புகிறேன். தமிழ் நாட்டில் கூட எந்த மாற்றமும் ஏற்படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.அதற்கான வாய்ப்புகள் எம்ஜியாருக்கும்,ஜெயலலிதாவுக்கும் கிடைத்தும் கூட அவர்கள் இருவராலும் சாதிக்க இயலவில்லை. அதைப்பற்றிய அலசல்களை வேறு ஒரு சந்தர்ப்பத்தி்ல் விவாதிப்போம்.
இப்பொழுது நடக்க இருப்பது நாடாளுமன்றத்தேர்தல். இதில் களமிறங்கி இருக்கும்  அகிலஇந்திய அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் இணைந்து போட்டியிடுதலே சரியான ராஜதந்திரமாக இருக்கும். அல்லது தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத மக்களாளும்,சமுதாயங்களாளும் தோற்றுவிக்கப்பட்டு வலுவாக இயங்கிக்கொண்டிருக்கும் அரசியல் சமுக இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி ஒரே அணியாக தேர்தலில் நின்றால் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான அணியாக, வெற்றி வாகை சூடும் அணியாக நிச்சயம் இருந்திருக்கும். அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள்.
மேலும் சில ஆயிரம் வோட்டுக்களை பிரிப்பதின் மூலம் யார் வெற்றி பெறக்கூடாது என்று நீங்களும்,மாற்றத்தை விரும்புகிறவர்களும் நினைக்கிறீர்களோ அவர்களே வெற்றி பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
மேலும் தனித்து நின்றுதான் நான் வெற்றி பெறுவேன் என்று எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அரசியல் கட்சி நடத்துவீர்கள்? இல்லை, உங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் மகாத்மா காந்திகளா?எங்கெல்லாம் பதவி கிடைக்குமோ அங்கிருந்து அரசியல் பண்ணுவதுதான் இன்றய அரசியல் கணக்கு என்பது உங்களுடன் இருப்பவர்களுக்கும் தெரியும்.
மேலும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தாமல் போனாளும் அந்த தொகுதியில் இருக்கும் உங்கள் கட்சிக்காரன் யாருக்கு வாக்களிப்பான்? நிச்சயமாக தொகுதி மாறி வாக்களிக்க முடியாது. ஏதோ ஒரு கட்சி அல்லது அணிக்கு ஓட்டளிக்கத்தானே போகிறார்கள்? அப்படியானால் ஏன் இப்பொழுதே ஏதேனும் ஒரு அணியில் இணைந்து பணியாற்றக்கூடாது?கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி மத்தியில் சில அமைச்சர் பதவிகளைப்பெற்று அதன் மூலமாகவும் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் செய்யலாமே?
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் நிச்சயமாக முடியும். அதற்குத்தேவை கூடவே விவேகமும்,சாணக்கியமும்.
வாழ்த்துக்கள்!!!

செவ்வாய், 17 மார்ச், 2009

  நரகாசுரன் கதை........
தமிழ் வலைப்பதிவுகளில் அவ்வப்பொழுது நான் சென்று ஏதேனும் படிக்க நேரும் பொழுதெல்லாம் எனக்கொரு புது உற்சாகம் தோன்றும்.அத்தோடு நின்றுவிடாமல்  நாமும் ஒரு வலைப்பதிவாளனாக மாறி,நம்முடைய அனுபவங்கள்.பார்த்தது,படித்தது,கேட்டது,மனதில் தோன்றியது என்று எல்லாவற்றையும் பதிவுசெய்து வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் தலைமுதல் கால்வரை கரைபுரண்டோடியது.
ஆனால் எப்படி எழுதுவது? எப்படி வடிவமைப்பது? எதுவும் தெரியாது.... ஆனால் ஒன்றைமட்டும் மிக மிக உறுதியாகச் சொல்வேன்; அனைத்து வலைப்பதிவர்களும் நல்ல உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளையும்,உனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் போகப்போக உன்னால் முடியும் என்ற ஊக்க மருந்தினையும் அளித்திருந்தது மிக்க பயனுள்ளதாக இருந்தது.
இதோ இன்று தீபாவளி நாள்......இந்து சகோதரர்கள்(கே,போன்ற இரண்டு சுழி எழுத்துக்கள்  ரொம்பவும் படுத்துது)
மகிழ்வுடன் பண்டிகை கொண்டாடிக்கொண்டிருக்கும் பொழுது இதோ நானும் தட்டித்தட்டி தவழ்ந்து தவழ்து ஒரு புதிய உலகில் காலடி(கையடி?) எடுத்து வைக்கின்றேன்.
யார் மீதும் கோபம் இல்லை..... எதன் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை...... தெரியாததை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும்,தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணம் தவிர வேறொன்றும் அறியேன் இறைவா!!
 தன்னைத்தொழுபவன்,தொழாதவன்.ஏற்றுக்கொண்டவன்,மறுப்பவன்,ஆகிய எல்லா உயிற்க்கும் உணவளித்து,காத்து, அழித்து உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் இறைவா! அனைவருக்கும் அருள் புரிவாயாக!!
ஓ! எதையோ எழுதத்துவங்கி எங்கோயோ போய்விட்டேன்.... நரகாசுரன் கதை இதோ.......
பெயர் எதுவும் வேண்டாம்...எண்களில் அறிமுகம் செய்கிறேன்....
நம்பர் ஒன்றும்,இரண்டும் நண்பர்கள்,உறவினர்களும் கூட. நம்பர் மூன்று இருவருக்கும் பொதுவான நண்பர்;
வயதில் பெரியவர்.அவ்வப்பொழுது சில பொருளாதார உதவிகள் தனக்காகவும்,பிறருக்காகவும் கேட்டு வருவார்.
உரிமையுடன் உத்தரவும் போடுவார்,அவர்களும் அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள்.உள்ளுர் அரசி(யலி)ல் நம்பர் மூன்றுக்கு சிலரைத்தெரியும்.அதன்மூலமாக ஒன்றுக்கும்,இரண்டுக்கும் சில உதவிகள் கிடைத்துள்ளன.நம்பர் நான்கு, மூன்றுக்கு நண்பர்.ஒன்றுக்கும்,இரண்டுக்கும் நான்கை முன்னர் தெரியாது.நான்கு அரசுப்பணியில் உள்ளார். இந்நிலையில் ஒன்றுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட, நான்கினால் அதை தீர்த்து வைக்கமுடியும் என்பதை மூன்று அறிந்து ஒன்றை மூன்றிடம் அறிமுகம் செய்து,அந்த சிக்கலில் இருந்து ஒன்றை விடுவித்து விடுகின்றார்.
சில மாதங்கள் கடந்து செல்கின்றன......
இப்பொழுது மூன்றுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டு விடுகின்றது.இரண்டிடம் சென்று அவசர உதவி கேட்கின்றார்.
ஒன்றிடம் ஒன்றும் இல்லை கொடுப்பதற்கு.தன்னால் உதவி செய்யமுடியாத நிலையில் இருப்பதை மூன்றிடம்
சொல்ல,அவர் கோபப்பட்டதுடன் நிறுத்திக்கொள்ளாமல்,இதற்கெல்லாம் காரணம் இரண்டுதான் என்று சம்பந்தம் இல்லாமல் இரண்டைப்பற்றி நண்பர்களிடம் எல்லாம் குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.ஐந்தாவது நண்பர்
மூலம் இதைக்கேள்விப்பட்ட இரண்டு,மூன்றிடம் கேட்ட பின்னரே ஒன்று உதவிகேட்டதாகவும் தன்னால் இயலா
மல் இருப்பதையும் சொல்கிறார்.இத்துடன் முடிந்திருக்க வேண்டிய இப்பிரச்சினை எப்படி முடிகின்றது என்பதுதான் கதையின் கிளைமாக்ஸ்.
மூன்று தன் நண்பரான நான்கைச்சந்தித்து உடனேயே ஒன்றுக்கு ஏதேனும் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்றும் முன்பு அவர் செய்து கொடுத்த உதவியையும் அப்பொழுதே மாற்றிக்கொண்டு மீண்டும் ஒரு பெரிய சிக்கலில் நிறுத்தி தன்னிடம் உதவி கேட்டு வரவேண்டும் என்றும்,தன்மூலமே அந்த சிக்கலில் இருந்து ஒன்று விடுபடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார். ஒன்றிரண்டு சந்திப்புக்குப்பின்னர் ஒன்றும்,நான்கும் நண்பர்களாகிவி்ட்ட விபரம் மூன்றுக்குத் தெரியாமல் போனது அவரின் அபாக்கியமே!
உடனே நான்கு ஒன்றை சந்தித்து நடந்த விசயத்தைத் தெரிவித்து இப்படிப்பட்ட நண்பர் எல்லாம் தேவைதானா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுரையும் செய்கின்றார்.இந்த நால்வர்களுக்குமான உறவில் சிறிய இடைவெளி ஏற்படுகின்றது. இதை நன்றாக உணர்ந்தவர் நம்பர் மூன்றுதான். தான்தான் காரணம் என்பதை அறிந்தவர் தனக்குள் இருக்கும் நரகாசுரனை அழிக்கும் நாளை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். தீபாவளி வடிவத்தில் அந்த நாளும் நெருங்கிவர,ஒன்று,இரண்டு,நான்கு ஆகிய நண்பர்களை விருந்துக்கு அழைக்கின்றார்.ஒன்றும் இரண்டும் செல்லவில்லை,நான்கு போனது பற்றி தகவல் இல்லை.
ஒன்று, இரண்டிடம் காரணம் கேட்டார்,ஏன் கலந்துகொள்ளவில்லை என்று,நரகாசுரனை அழிப்பதுதான் உண்மையான தீபாவளி என்றால் என்னைப்பொருத்தவரை ஒரு நரகாசுரன் ஒழிந்தார் என்று பதில் சொன்னார்.
இந்தப்பிரச்சினையில் எந்த வகையிலும் தொடர்பில்லாமல் வெறுமனே பாதிக்கப்பட்ட இரண்டு ,தான் விருந்தில் கலந்துகொள்ளாததற்கு எந்தக்காரணமும் சொல்லாமல் மெளனத்தை பதிலாகத்தந்தார்.
இதில் யார் நரகாசுரன்? யார் யாரை ஒழித்தார்கள்?
உண்மையில் யார் செய்தது சரி? அல்லது தவறு என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.
ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்: நால்வரில் இருவர் ஒரு மதத்தையும், மற்ற இருவரும் வேறு ஒரு மதத்தையும் சார்ந்தவர்கள்.மதங்களை மீறி நட்பு கொண்டவர்கள்,ஆனால் ஏன் அவர்களின் நட்பு நீடிக்கவில்லை? நாம் எல்லோருக்குமான கேள்வி இது.