சில வருடங்களுக்கு முன் ஒரு சினிமா பாடல் வெளியானது. அந்தப் பாடலைப் பாடியவரையும்,அந்தப் பாட்டையும் யாரும் மறந்திருக்க முடியாது. வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்று தொடங்கும் அப்பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திருந்த அப்பாடலை இப்பொழுது எங்குமே கேட்க முடிவதில்லை. அதை விடப் பரிதாபம் அந்த அருமையான கலைஞனையும் காணாமல் ஆக்கி விட்டார்கள். ஒரு கையை உயர்த்திப் பிடித்து ஒரே பாட்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்று ஒரு இடத்தில் கங்கை அமரன் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு யாரும் புகழ் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!
இன்றைக்கு ஒரு பாடல் தமிழ் மக்களையும், அதைத்தாண்டி இந்தியாவையும், உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறதாம். அதுதான் கொலவெறி... கொலவெறி எனத் துவங்கும் பாடல். சமூகத்திற்கு உருப்படியான எந்தக் கருத்துக்களும் சொல்லாத, எவ்விதமான அர்த்தங்களும் இல்லாத இப்பாடல் யூடியூப் மற்றும் டைம் மேகஸின்,அமிதாப் பச்சனின் பாராட்டுதல்களும் பெற்று விட்டதாம். இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகளும் கூட அம்மா வயிற்றிலிருந்து கொண்டு இந்தப் பாட்டைக் கேட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கையில் நீங்காத இடத்தைப் பிடிக்கப் போகிறது.
இத்தோடு கவிழப் போவது யார்? இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதிப் பாடிய தனுஷா? இசை அமைத்த இசை அமைப்பாளரா? காலம் விரைவில் பதில் சொல்லும். வாழுங்கள் வாழ விடுங்கள் மக்களே!!
சனி, 10 டிசம்பர், 2011
காலமும் மனிதர்களும்....
புதன், 27 ஜனவரி, 2010
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
சனி, 16 மே, 2009
இது தான்டா தேர்தல்.
இது தான்டா தேர்தல்...
ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?
கூடு விட்டு கூடு பாய்ந்த தென்ன? பேசிய பேச்சு என்ன?
எல்லாவற்றுக்கும் சேர்த்து தமிழ் மக்கள் வைத்தார்கள் ஆப்பு....
ஜெயலலிதாவாகட்டும்,பா.ம.க.வின் ராமதாஸாகட்டும்,வை.கோ, கம்யுனிஸ்டுகள்,கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல் விளையாட்டு விளையாடும் இன்ன பிற அரசியல் வியாபாரிகள், எல்லோருக்கும் சேர்த்து தமிழ் மக்கள் வைத்தார்கள் ஆப்பு.....
இப்ப எங்கே போய் முகத்தை வைக்கப் போகிறீர்கள் கயவர்களே?
இதில் சில காங்கிரஸ்காரனும் அடக்கம்.
சிங்கப்புர் ஆகவும்,துபாய் ஆகவும் மாற்றுவேன் என்று வோட்டு வாங்கி வெற்றி பெற்று தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டவர்களும் அடங்கிப் போனார்கள்.
சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளுக்கும் செய்தி உண்டு. வெற்று வாக்குறுதிகளால் வெற்றி பெற முடியாது. கடைசி வரை பரபரப்பில் வைத்து ஏதோ கடைசி நேரத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் தோற்றிருக்க வேண்டும் என்பதே பலரின் ஆவலாக இருந்தது.
சில ஜோக்கர்களும் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் அது பாரதிராஜா, சீமான்,அமீர், ப.நெடுமாறன் மற்றும் பிற புலிகள் தின்று வீசும் எலும்புகளைப் பொறுக்கும் இந்திய விரோதிகள்.
தமிழ் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல... கோமாளிகள் யார் என்று தெரிந்தே இருக்கிறார்கள்.
இன்னும் ஐந்து வருடங்கள் உங்களுக்கு நேரம் இருக்கிறது. நன்றாக உறங்கி இதுவரை சம்பாதித்ததை நன்றாகத் தின்று எங்கே என்ன எப்படித் தவறு செய்தோம் என்று அமைதியாக சிந்தித்து நல்ல அரசியல் செய்வதற்கு மீண்டு வாருங்கள். நேர்மையும்,சேவையும் இருந்தால் பொது மக்கள் பணத்தைத் தின்றாலும் பரவாயில்லை என இனி வரும் தலைமுறை இதை விட சிறப்பாக உங்களை வாழ வைக்கும் அல்லது வீழ வைக்கும்.!
வெள்ளி, 8 மே, 2009
அம்மா....அம்மா...(இரண்டு பேர்)
ஜெயலலிதாவைப் பற்றியும்,சோனியா காந்தியைப் பற்றியும் எழுதப்படும் இடுகையல்ல. மன்னிக்கவும்... என்னைப் பெற்ற அம்மாவைப் பற்றியும்,நான் பெற்ற அம்மாவைப் பற்றியும் நினைத்துப் பார்த்து பெருமிதம் கொள்ளும் தருணங்களை பகிர்ந்து கொள்ளும் நேரம்.
எல்லோரும் வருடத்தில் ஒரு நாள் நினைவு கொள்ளும் தாயார் தினத்தில் அனைத்து நாட்களையும் தாயார் தினமாக நினைக்கும் என்னைப்போன்ற நண்பர்களுக்கு இது அர்ப்பணம்.
முதலில் என்னைப் பெற்ற அம்மா.......
முதன் முதலில் பெற்ற பெண் குழந்தையின் மரணம்... அடுத்து ஒரு பெண் குழந்தை... மூன்றாவதாகவும்,முதல் ஆண் குழந்தையாகவும் என்னைப் பெற்றெடுத்த அவர்கள் எவ்வளவு மகிழ்திருக்க வேண்டும்?அந்த மகிழ்ச்சியான தருணங்கள் எதுவும் இறைவன் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், ஒவ்வொரு நாளும் நான் செத்துப் பிழைத்தவன்.காய்ச்சலில் ஆரம்பித்து வலிப்பு வரை சென்று பேச்சு மூச்சற்றுக் கிடந்த நாட்கள் ஏராளம்.
நாட்டு வைத்தியன் கூட இல்லாத கிராமம் இருமேனி, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சாலை உள்ள ஊர் உச்சிப்புளி. வீட்டில் இருந்து மண்அடர்ந்த பாதையில் ஓட்டமும் நடையுமாகச் சென்று அங்கே காத்திருந்து பேருந்து பிடித்து சுமார் ஒரு மணி நேரம் பயணித்து இராமநாதபுரம் நகரத்தில் இறங்கி குதிரை வண்டி பிடித்து மருத்துவமனை வந்து சேர்வதற்குள் விரைத்துப் போயிருக்கும் பிள்ளையை சுமந்த ஒரு தாயின் வலி எப்படி இருந்திருக்கும்? இது மாதிரியான அனுபவங்கள் ஒரு முறையல்ல...ஒன்பது முறையல்ல... எனக்கு ஐந்து வயதாகும் வரை இப்படியான சோதனைகள் என் அம்மாவுக்கு பல தடவைகள் நடந்திருக்கின்றன.தந்தை வெளிநாட்டில் பஞ்சம் பிழைக்க,பெரிய படிப்பரிவில்லாத கால கட்டத்தில் அம்மாவின் தாய்மையும்,பிள்ளையை எப்படியும் பிழைக்க வைக்க வேண்டும் என்ற வெறியும்,அதற்காக அவர்கள் பட்ட வேதனையையும் எந்த வார்த்தைகளிலும் விவரிக்க முடியாது என்றே எனக்குப் படுகின்றது. வேண்டுமானால் அம்மாவைப் போன்ற இன்னொரு பெண்ணால் மட்டுமே அதை உணர முடியம்.
அம்மாவைப் பற்றி எழுதுவதற்கு ஆயிரம் செய்திகள் இருக்கின்றன. அவ்வப் பொழுது அதை எழுதுவேன்.இந்த ஒரு செய்தி மடடுமே போதும் ஆயுள் முழுதும் நான் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவன் என்பதை உணர்த்த.
எனக்குப் பிறகு அம்மாவுக்கு இன்னும் இரண்டு ஆணும்,இரண்டு பெண் பிள்ளைகளும் பிறந்தார்கள். ஆனாலும் பத்து வயது வரை அம்மாவின் செல்லப்பிள்ளை நான்தான்.
இதை எதுவும் புரிந்து கொள்ளாத, அல்லது இப்படியே விட்டு விட்டால் பிள்ளை கெட்டு விடுவான் என்ற நன்னோக்கில் பத்து வயது ஆகும் பொழுது குருகுலத்திற்கு அனுப்பப்பட்டு வேத பாடசாலையில் சேர்க்கப்பட்டேன்.
என்னைப் பிரிந்த அம்மா... அம்மாவைப் பிரிந்த நான்... யாருடைய துயரம் பெரியது என்று பெரிய பட்டிமன்றம் வைத்தாலும் முடிவு சொல்ல முடியாதளவு வேதனை. ஓன்பது வருடங்கள். வருடத்தில் இரண்டு மாதம அம்மாவுடன். பத்து மாதங்கள் பிரிவின் துயரில்.
இது அம்மாவுக்கும் மகனுக்குமாக உறவையும், அன்பையும் மேலும் பலப்படுத்தின.
அதன் பிறகும் அடுத்த பிரிவுக்கு என்னை தயார் படுத்தினேன்.வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதித்து அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் அம்மாவு்க்கு வேதனையை அளித்தேன்.
அடுத்து ஒரு எட்டு வருடங்கள் வெளிநாட்டில் வேலை. திரும்பி வந்து ஒரு வருடம் மட்டும் அம்மாவுடன் இருந்து விட்டு,வேறு ஒரு நாட்டிற்கு ஓட்டம். அம்மா....அம்மா என்று மனது கதறித்துடிக்க, என் மகன்...என் மகன் என்று கதற.... வாழ்க்கை மிக வேகமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலங்களில் ஒரு மகனாக நான் ஆற்ற வேண்டிய கடமை களில் ஓரளவு மனத் திருப்தி தரும் வகையில் நடந்து கொண்டேனா இல்லையா என்பதை நான் சொல்ல முடியாது. அம்மாவும், மற்றவர்களும்தான் அதை சொல்ல வேண்டும்.
என்ன தவம் செய்தேன் இறைவா! என் அம்மாவை எனக்கு கிடைக்கச் செய்தாயே உனக்கே எல்லாப் புகழும்.
நான் பெற்ற அம்மாவைப் பற்றி அடுத்து எழுதுவேன்.
சனி, 2 மே, 2009
வெள்ளி, 27 மார்ச், 2009
அரசியல்
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களே!
---------------------------------------------------------------------------
தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்து அதை அறிவித்தும் விட்டீர்கள். ஆகவே எனக்குத்தெரிந்த நியாயம் என்ற வகையில் சில விபரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்தியாவின் பிரதமராகி நாட்டை தலைகீழாக மாற்றி சாதனை மனிதராக ஆகவேண்டும் என்பது நிச்சயமாக தங்களின் கனவாக இருக்காது என்று நம்புகிறேன். தமிழ் நாட்டில் கூட எந்த மாற்றமும் ஏற்படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.அதற்கான வாய்ப்புகள் எம்ஜியாருக்கும்,ஜெயலலிதாவுக்கும் கிடைத்தும் கூட அவர்கள் இருவராலும் சாதிக்க இயலவில்லை. அதைப்பற்றிய அலசல்களை வேறு ஒரு சந்தர்ப்பத்தி்ல் விவாதிப்போம்.
இப்பொழுது நடக்க இருப்பது நாடாளுமன்றத்தேர்தல். இதில் களமிறங்கி இருக்கும் அகிலஇந்திய அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் இணைந்து போட்டியிடுதலே சரியான ராஜதந்திரமாக இருக்கும். அல்லது தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத மக்களாளும்,சமுதாயங்களாளும் தோற்றுவிக்கப்பட்டு வலுவாக இயங்கிக்கொண்டிருக்கும் அரசியல் சமுக இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி ஒரே அணியாக தேர்தலில் நின்றால் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான அணியாக, வெற்றி வாகை சூடும் அணியாக நிச்சயம் இருந்திருக்கும். அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள்.
மேலும் சில ஆயிரம் வோட்டுக்களை பிரிப்பதின் மூலம் யார் வெற்றி பெறக்கூடாது என்று நீங்களும்,மாற்றத்தை விரும்புகிறவர்களும் நினைக்கிறீர்களோ அவர்களே வெற்றி பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
மேலும் தனித்து நின்றுதான் நான் வெற்றி பெறுவேன் என்று எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அரசியல் கட்சி நடத்துவீர்கள்? இல்லை, உங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் மகாத்மா காந்திகளா?எங்கெல்லாம் பதவி கிடைக்குமோ அங்கிருந்து அரசியல் பண்ணுவதுதான் இன்றய அரசியல் கணக்கு என்பது உங்களுடன் இருப்பவர்களுக்கும் தெரியும்.
மேலும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தாமல் போனாளும் அந்த தொகுதியில் இருக்கும் உங்கள் கட்சிக்காரன் யாருக்கு வாக்களிப்பான்? நிச்சயமாக தொகுதி மாறி வாக்களிக்க முடியாது. ஏதோ ஒரு கட்சி அல்லது அணிக்கு ஓட்டளிக்கத்தானே போகிறார்கள்? அப்படியானால் ஏன் இப்பொழுதே ஏதேனும் ஒரு அணியில் இணைந்து பணியாற்றக்கூடாது?கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி மத்தியில் சில அமைச்சர் பதவிகளைப்பெற்று அதன் மூலமாகவும் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் செய்யலாமே?
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் நிச்சயமாக முடியும். அதற்குத்தேவை கூடவே விவேகமும்,சாணக்கியமும்.
வாழ்த்துக்கள்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)